பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
04:07
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் முத்துமாரியம்மன் குடியிருக்கிறாள். குழந்தையாக இருக்கும் இந்த அம்மன் தன்னை நாடி வருவோருக்கு பிள்ளைவரம் தருகிறாள்.
தாயமங்கலத்தில் வாழ்ந்த வணிகர் ஒருவர் வியாபாரத்திற்காக மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தை இல்லை. அம்மனிடம் குறை தீர்க்கும்படி வேண்டுவார். ஒருசமயம் மதுரையில் இருந்து ஊர் திரும்பும் போது தனியாக நின்று அழுது கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அவளை பரிவுடன் விசாரித்தார். மீனாட்சியம்மனே குழந்தையாக வந்ததாக எண்ணி தன்னுடன் அழைத்து வந்தார். இங்குள்ள குளக்கரையில் குழந்தையை அமரச் செய்து, நீராடச் சென்று திரும்பினார். குழந்தையைக் காணவில்லை. மனைவியிடம் நடந்ததை வருத்தத்துடன் கூறினார். அன்றிரவில் கனவில் தோன்றிய அம்பிகை, தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள்.
கற்றாழைக் காட்டில் ஓரிடத்தை காட்டி அங்கு தனது பாதச்சுவடு இருப்பதாகச் சொன்னாள். அதன்படி அங்கு சென்ற வணிகர், சுவடு இருந்த இடத்தில் கிடந்த மண்ணை பிடித்து வைத்து கோயில் எழுப்பினார். பிற்காலத்தில் சிலை வடித்து கோயில் கட்டப்பட்டு அம்பிகைக்கு ‘முத்து மாரியம்மன்’ என பெயர் சூட்டப்பட்டது.
முத்து மாரியம்மன் நான்கு கைகளிலும் உடுக்கை, கத்தி, சூலம், அக்னி ஏந்தியிருக்கிறாள். தலையில் அக்னி கிரீடம் உள்ளது. சிறுமியாக வந்ததால் இவளை கன்னித் தெய்வமாக வழிபடுகிறார்கள். திருமண பாக்கியத்திற்காக வேண்டுவோர் தங்கத்தில் பொட்டு செய்து அதை அவளது பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு தாயாக இருந்து அருள்புரிவதால் ‘தாய் மங்கலம்’ எனப்பட்ட இத்தலம் ‘தாய மங்கலம்’ என மருவியது. அம்மை கண்டு குணமடைந்தவர்கள் ஆயிரம் கண் பானை, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோயில் முகப்பில் விநாயகர், முருகன் உள்ளனர். பிரகாரத்தில் கருப்பணர், காளியம்மன், ஆதிமுத்துமாரி, காலபைரவர் சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு அருகில் மாரியம்மன் தீர்த்தம் உள்ளது.
பிரகாரத்திலுள்ள வில்வ மரத்தில் குழந்தை பாக்கியத்திற்காக தொட்டில் கட்டுதல், வயிற்று நோய் தீர மாவிளக்கு, கண் நோய் தீர கண்மலர் காணிக்கை செலுத்துகின்றனர். அம்மை தீர அபிேஷக தீர்த்தம் தரப்படுகிறது. அம்மன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை இட்டு ஊர்வலமாக எடுத்து வருவர்.
செல்வது எப்படி
சிவகங்கையில் இருந்து 22 கி.மீ.,
விசேஷ நாட்கள்
ஆடி, தை வெள்ளி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்
நேரம்
காலை 7:00 – இரவு 7:00 மணி
தொடர்புக்கு
04564 – 206 614
அருகிலுள்ள தலம்: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் 20கி.மீ.,