பதிவு செய்த நாள்
22
ஜூலை
2020
03:07
சென்னை : -மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டை, அடுத்த ஆண்டு தஞ்சையில் நடத்த, தமிழ்த் தாய் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அதன் நிறுவனர், உடையார்கோவில் குணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு, மலேஷியாவின் கோலாலம்பூர், இந்த ஆண்டு, இலங்கையின் யாழ்ப்பாணத்தில், இரண்டு உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்தியுள்ளோம்.அடுத்தாண்டு, பிப், 26, 27, 28 ஆகிய நாட்களில், தஞ்சையில், மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதை, தமிழக அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், கல்லுாரிகளுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, 3 அடி- உயரம், 750 கிலோ திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி, ஸ்ரீ கிருஷ்ணா சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்படுகிறது. இது, தமிழகம் முழுதும் அலங்கார ஊர்தியில், 10 நாட்கள் ஊர்வலமாக செல்லப்படும்.பின், அது, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கல்வி நிறுவனம், தமிழ்ச் சங்க அமைப்பு ஆகிய ஏதேனும் ஒன்றில் நிறுவ அன்பளிப்பாக வழங்கப்படும்.திருக்குறளின் சிறப்புகள், அரிய தகவல்கள், நெறிகள், அரிய பணிகளை தொகுத்து, சிறப்பு மலர் வெளியிட உள்ளோம்.
இதற்கு, அறிஞர்கள், ஆய்வுக் கட்டுரைகளை, kuralmanadu21tnj@gmail.com மற்றும் thamilthaitrust@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழார்வலர்கள் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, 75300 02454, 94439 38797 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.