சென்னை : கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், முருகனை துதித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைலராகி வருகிறது.
தலைசிறந்த அரசியல் ஆளுமை, சிறந்த நடிகை என்பதையும் தாண்டி, அருமையாக பாட்டும் பாடும் திறமை படைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அம்மா என்றால் அன்பு.... (படம்: அடிமைப்பெண்), ஓ மேரி தில்ருபா... (படம்: சூரியகாந்தி), சித்ர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்... (படம்: அன்பைத் தேடி), இரு மாங்கனி போல் இதழ் ஓரம்.... (படம்: வைரம்) போன்ற பாடல்களை தன் குரலில் கொடுத்துள்ளார். இவர் பாடிய சினிமா பாடல்கள் கூட பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பலரும் அறிந்திராத ஒன்று அவர் பக்தி பாடல்களும் பாடியிருக்கிறார்.
சினிமாவில் அவர் பிரபலமாக இருந்த காலத்தில் மறைந்த வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் அம்மா என்றால் அன்பு என்ற ஆல்பத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார் ஜெயலலிதா. தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்... எனும் முருகன் பாடலையும், மாறி வரும் உலகினிலே மாறாத மாரியம்மா... எனும் அம்மன் பாடலையும் பாடியிருக்கிறார். இந்த பாடல்களில் முருகன் பாட்டை தவசீலனும், அம்மன் பாட்டை பூவை செங்குட்டுவனும் எழுதி உள்ளனர்.
உலகமே கொரோனாவல் தவித்து வர இந்த நேரத்தில் கூட இந்துக்களையும், இந்து மத கடவுள்களையும் அவதூறு செய்து வருகிறது கருப்பர் எனும் கூட்டம். சமீபத்தில் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை பழித்து இவர்கள் பதிவிட்ட வீடியோ, இந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அன்று ஜெயலலிதா பாடிய, தங்க மயில் ஏறி வரும் எங்கள் வேலன்... என்ற பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.