பதிவு செய்த நாள்
22
ஜூலை
2020
03:07
ஊரடங்கால், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை மற்றும் அர்ச்சனை கட்டணம் மூலம் கிடைக்கும், 60 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாரை தரிசிக்க ஏராளமானோர் வருவர். ஊரடங்கு காரணமாக, மார்ச், 20ல் மூடப்பட்ட கோவில்கள் நேற்று வரை திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வெளியில் நின்று வழிபடுகின்றனர். இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் உதவி ஆணையர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள், 12 அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மாதந்தோறும், 10 லட்சம் ரூபாய் வரை உண்டியல் காணிக்கையாகவும், அர்ச்சனை கட்டணம், மூன்று லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும் கிடைக்கும்.
இதுகுறித்து, ஆஞ்சநேயர் கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில் மூலம், பல்வேறு வகைகளிலும், காணிக்கையாகவும், சிறப்பு கட்டணங்களாகவும், மாதந்தோறும் கிடைத்த, 15 லட்சம் ரூபாய் கிடைக்கவில்லை. நான்கு மாதங்களில் மட்டும், 60 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இக்கோயில் நிர்வாகத்தில் அலுவலர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கான ஊதியம், இதர பணிகளுக்கு கோவிலில் கிடைக்கும் தொகையை கொண்டே செலவழித்து வருகிறோம். ஊரடங்கிலும் அர்ச்சகர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா, 1,000 ரூபாய் வழங்கினோம். கோவில்கள் திறக்கப்பட்டால் தான் அடுத்த கட்ட பணிகளை துவங்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.