ஒருமுறை சொற்பொழிவாற்ற வெளிநாட்டு தலைவர் சிலர் வந்தனர். இறைவனைப் பற்றி பேசாமல் தங்களைப் பற்றியே அதிகம் கூறினர். தங்களால் தண்ணீரில் நடக்க முடியும், நெருப்பில் புகுந்து வெளிவர முடியும், மணலைக் கயிறாக திரிக்க முடியும் என்று அபூர்வ சக்தி இருப்பதாகத் தெரிவித்தனர். சொற்பொழிவின் முடிவில் நன்றி கூற எழுந்தார் முல்லா. தனக்கும் அபூர்வ சக்தி இருப்பதாக தெரிவித்தார். இருளில் எவ்வளவு துாரம் வேண்டுமானாலும் செல்ல முடியும் என்றார். ‘‘அடர்ந்த காட்டுக்குள் இருளிலும் முல்லாவால் நடக்க முடியுமா?’’ என அவர்கள் கேட்டனர். ‘‘முடியும்’’ என்றார் முல்லா. அன்றிரவு உணவு சாப்பிட்ட பிறகு, முல்லாவின் ஆற்றலை சோதிக்க முடிவு செய்தனர். தலைவர்களும், உள்ளூர் மக்கள் சிலரும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடினர். காட்டைச் சுற்றி விட்டு இருட்டில் வரப் போவதாக தெரிவித்த முல்லாவின் வருகைக்காக காத்திருந்தனர். அமாவாசை இரவு என்பதால் வானம் கும்மிருட்டாக இருந்தது. அருகில் நிற்கும் ஆள் கூட தெரியவில்லை. குறுக்கும் நெடுக்குமாக உள்ள மரங்களை அடையாளம் கண்டு ஒதுங்கி முல்லா எப்படி வருவார் என்று ஆவல் அதிகரித்தது. சற்று நேரம் கடந்தது. கையில் விளக்குடன் வந்தார் முல்லா. ‘‘இது என்ன? விளக்கேந்தியபடி வருகிறீரே... இருளில் நடப்பதாக சவால் விட்டது பொய்யா’’ எனக் கேட்டனர். ‘‘நண்பர்களே... இருட்டிலும் என்னால் பார்க்க முடியும். ஆனால் வருவது நான் தானா என நீங்கள் பார்க்க வேண்டாமா? வேறொருவரை நடக்க விட்டு ஏமாற்றியதாக அவப்பெயர் எனக்கு வரக் கூடாதே? அதனால் என்னை அடையாளம் காணவே விளக்குடன் வந்தேன்’’என்றார். ‘‘தலைவர்களே... உங்களிடம் அபூர்வ சக்தி இருப்பதாக சொன்னீர்களே அதற்கு எந்த விதத்திலும் என் சக்தி குறைந்தது அல்ல’’ என்றும் தெரிவித்தார். தங்களின் தவறை உணர்த்த நடத்தும் நாடகம் இது என்பதை உணர்ந்து அவர்கள் அமைதியடைந்தனர்.