பதிவு செய்த நாள்
30
ஜூலை
2020
04:07
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர் மற்றும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் பிரமாண்ட ராமர் கோவிலின் முப்பரிமாண தோற்றத்தை வரும் ஆக.5ம் தேதி திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, மத்திய அரசு, கோவில் கட்டுவதற்காக, கடந்த பிப்ரவரியில், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் கொண்டாட்டம் குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் பொது விவகார குழுவின் தலைவரான ஜெகதீஷ் செஹானி கூறுகையில், ஆக.5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நியூயார்க்கில் கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்காக மாபெரும் நாஸ்டாக் மற்றும் 17,000 சதுர அடி பிரமாண்ட எல்.இ.டி டிஸ்பிளே திரையை குத்தகைக்கு எடுத்துள்ளோம். ஆகஸ்ட் 5ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற சொற்களின் படங்கள், கடவுள் ராமரின் உருவப்படங்கள் மற்றும் வீடியோக்கள், கோயிலின் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலைகளின் முப்பரிமாண உருவப்படங்கள் மற்றும் அஸ்திவாரம் அமைக்கும் படங்கள் விளம்பர பலகையில் திரையிரடப்படும்.
மேலும் டைம்ஸ் சதுக்கத்தில் ஏராளமான இந்தியர்கள் ஒன்று திரண்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை இனிப்புகளை பரிமாறி கொண்டாட உள்ளனர். இது வாழ்நாளில் ஒரு முறை அல்லது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை அல்ல. இது மனிதகுல வாழ்க்கையில் ஒரு முறை வரும் ஒரு நிகழ்வு. ராமருக்கான கோயில் கட்டுவதை இங்கு தவிர வேறு எங்கும் சிறப்பாகக் கொண்டாட முடியாது. பிரதமர் மோடியின் ஆட்சியில், உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களின் கனவான , அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது உண்மையாகவுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாள் இவ்வளவு விரைவாக வரும் என நாங்கள் நினைத்ததில்லை. பிரதமர் மோடியின் தலைமை காரணமாக, அந்த நாள் வந்திருக்கிறது.இதனை நாங்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாட விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.