சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மின்னாம்பள்ளியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 7ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.நேற்று இரவு 7 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையலும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று (மே 16) இரவு 7 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடக்கிறது.நாளை (மே 17) காலை 7 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து காலை 9 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மே 18ம் தேதி காட்டேரி வேடம் அணிந்த வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.மே 19ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.