குளித்தலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 29 ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 11.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டு குளித்தலை நகராட்சி அலுவலகம், பழைய கோர்ட் தெரு, பஜனைமடம், அக்ரஹாரம், பெருமாள் கோவில் வழியாக கோவிலை அடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கோவில் முன்புறம் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் குண்டத்தில் இறங்கினர். அக்னி சட்டி, அலகு குத்திக் கொண்டு பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். கோவிலை சுற்றி பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி குளித்தலை டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.