பதிவு செய்த நாள்
12
ஆக
2020
03:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ண ஜெயந்தியான நேற்று, பல்வேறு கிருஷ்ணன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியில், உற்சவரை அலங்காரம் செய்து தேரில் வைத்து, திருவீதி உலா கொண்டு செல்வது வழக்கம். தற்போது, கொரோனா பரவலை தடுக்க, அதிக கூட்டத்தை சேர்க்காமல் சுவாமி வழிபாட்டை நடத்த, அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால், உற்சவரை அலங்காரம் செய்து, இளைஞர்கள் தோளில் சுமந்து, தெருக்களில் உலா கொண்டு சென்றனர். வழியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிருஷ்ணன் கோவில்களில் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
* தர்மபுரி அடுத்த அதகபாடி லட்சுமி நாரயண சுவாமி கோவிலில் நேற்று, லட்சுமி நாராயண சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் பாலாபிஷேகம் நடந்தது. ஊரடங்கால் நேற்று, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை. அவரவர் வீடுகளிலேயே, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்ந்தனர். தர்மபுரி, குமாரசாமிபேட்டை சென்னகேசவ பெருமாள் கோவில், கோட்டை வரலட்சுமி உடனமர் பரவாசுதேவர் கோவில், செட்டிக்கரை சென்றாயபெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாயபெருமாள் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்பட, பெருமாள் கோவில்களில் நேற்று, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.