பதிவு செய்த நாள்
12
ஆக
2020
03:08
கிருஷ்ணகிரி: ஆடிக்கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி, ஜெகதேவி பாலமுருகன் கோவில், சந்தூர் மாங்கனி மலை வேல்முருகன் கோவில், பர்கூர் பாலமுருகன் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள, அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடக்கும். இதில், அண்டை மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் கொரோனா பரவலை தடுக்க, கோவில் திருவிழா நடத்த அரசு தடைவிதித்துள்ளது. எனவே, ஆடிக்கிருத்திகை நாளான இன்று (ஆக.,12) முருகன் கோவில்களில் விழாக்கள் நடைபெறாது. எனவே, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதியில்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது, தொற்று நோய் பரவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த ஆடியோ பதிவு, வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் பக்தர்களுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.