பதிவு செய்த நாள்
21
ஆக
2020
08:08
பாலும் தெளி தேனும், பாகும், பருப்புமிவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்கோலம் செய்தோங்க கரி முகத்து துாமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!!
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அவதரித்த முழுமுதல் கடவுள் விநாயகரின் பிறந்த தினம் விநாயகர் சதூர்த்தி என, கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு, சனிக்கிழமை அன்று சதுர்த்தி வருவதால், காலை, 7:45லிருந்து 8:45க்குள், காலை, 10:30லிருந்து 12:00க்குள் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மாலை செய்ய வேண்டி இருந்தால், 4:45 மணிக்குப் பின் செய்யலாம். சதுர்த்தி என்பதால், காலையில் செய்வது தான் சிறப்பு.பால், மஞ்சள், தயிர், சந்தனம், திருநீறு, குங்குமம், எலுமிச்சை, பச்சரிசி, தங்க நகைகள், 1 ரூபாய் நாணயம் போட்டு, ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பஞ்சாமிர்தம் ஒரு கிண்ணத்தில் தயாரித்துக் கொள்ள வேண்டும்.பஞ்சாமிர்தம் செய்யும் முறை: நன்கு பழுத்த வாழைப்பழத்தை நறுக்கி, பேரீச்சம் பழத்தை சின்னசின்ன துண்டுகளாய் நறுக்கி, வெல்லம், கற்கண்டு சேர்த்து நன்கு பிசைந்து, இதில் நெய் சேர்த்து, எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அபிஷேகத்திற்கு தேவையான தண்ணீர், பூக்கள், பழங்கள், நல்லெண்ணய், நெய், துாப மணி எடுத்துக் கொள்ள வேண்டும்.சில்வர், பிளாஸ்டிக் டம்ளர், தட்டு போன்ற சாமான்களை, பூஜைக்கு தவிர்த்தல் அவசியம்.முக்காலியின் மீது தாம்பாளம் வைத்து, அதன் மீது விநாயகரை வைத்து, அபிஷேகம் செய்ய வேண்டும். 21 அபிஷேகப் பொருட்கள் இருத்தல் நலம் அல்லது ஒற்றைப் படையில் இருக்கலாம்.நாம் பயன்படுத்தும் நகைகளை நன்கு சுத்தம் செய்து, பன்னீரில் நனைத்து எடுத்து, துடைத்து, பிறகு விநாயகருக்கு அணிவிக்கலாம். விநாயர் அகவல், விநாயக போற்றி சொல்லி வழிப்படுவது நல்லது.
விநாயகருக்கு 21 மலர்கள்: புன்னை, மகிழம், மந்தாரை, பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மா பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செவ்வரளி, வில்வம், பவளமல்லி, கண்டங்கத்திரி, தாமரை, அல்லி, சாமந்தி, நந்தியாவட்டை.இலைகள்: மாசி, கிழா இலை, வில்வம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மா இலை, தங்கரளி, விஷுணுகரந்தி, மாதுளை, நொச்சி, மருவூ, ஜாதிக்காய் இலை, நுணா, நாரிசங்கை, வண்ணி, அரசு இலை, எருக்கு, தேவதாரு, துளசி (இன்று மட்டும் வைக்கலாம்.)பழங்கள்: நாவல், கிளாக்காய், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, மாம் பழம், பலா, வாழை, திராட்சை, பேரிக்காய், ஆப்பிள், விளாம்பழம், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, அத்தி, சீதாப்பழம், சப்போட்டா, அன்னாசி, இலந்தை,வேப்பம்பழம், கிவி பழங்கள்.
நைவேத்திய பொருட்கள்: மோதகம், அப்பம், அவல், கரும்பு, சுண்டல், பொரிகடலை, சுகியன், தேன், தினை, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம் பழம், நுணாப்பழம், நாவற் பழம்.எள்ளுருண்டை, வடை, அதிரசம்.தேங்காய் உடைத்து, சூடம் காட்டி, தீபாராதனை காட்டிய பின், வடக்கு பக்கமாய், விநாயகர் சிலையை நகர்த்தி வைக்க வேண்டும்.
செவ்வாய் வெள்ளிக் கிழமைகளாய் இல்லாத நாட்களில், ஓடும் நீரில் பிள்ளையாரைக் கரைப்பது நல்லது. தற்போது, வெளியில் சென்று கரைப்பது இயலாத காரியம் என்பதால், வீட்டிலேயே ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து, அதிலேயே கரைக்கலாம்; பின், வீட்டிலுள்ள செடி, மரங்களுக்கு ஊற்றி விடலாம்.எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும், அனைத்திலும் வெற்றியையும் அந்த முழுமுதற் கடவுள் விநாயகர் நமக்கு அளிப்பார்!