பதிவு செய்த நாள்
24
ஆக
2020
08:08
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, கணபதி ேஹாமம், திரவியாகுதி மற்றும் அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குமரன் நகர் சித்தி விநாயகர் கோவில்,தெப்பக்குளம் வீதி ராஜகணபதி கோவில், சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜய கணபதி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது.தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால், பொள்ளாச்சி பகுதியில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் தனியார் இடங்களில் மொத்தம், 45 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
நேற்றுமுன்தினம் மாலை தனித்தனியாக இந்து அமைப்பினர், பொதுமக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை, சமூக இடைவெளி பின்பற்றி அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்தனர். நெகமம், காளியப்பம்பாளையம், அண்ணா நகர் மற்றும் இந்து முன்னணி காரியாலயம் ஆகிய இடங்களில், விநாயகர் சிலை பிரதிஷ்டை, கணபதி ேஹாமத்துடன் நடந்தது.வால்பாறை தாலுகாவில், இந்து முன்னணி மற்றும் பா.ஜ., சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 60 விநாயகர் சிலைகள், நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. விழாவில் இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.கிணத்துக்கடவு ஆதிபட்டி விநாயகர் கோவிலில், வேள்வி பூஜை நடந்தது. பின், விநாயகருக்கு பால், பன்னீர், எலும்பிச்சை, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், குங்குமம், திருநீறு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகரில் உள்ள சோற்றுத்துறைநாதர் கோவிலில், சிவாச்சாரியார்கள் வேள்வி பூஜை செய்தனர்.
கலச நீரை எடுத்து சென்று விநாயகருக்கு ஊற்றி, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தனர்.உடுமலைஉடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. பிரசன்ன விநாயகர் கோவில், குட்டை திடல் சித்திபுத்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. சிறிய கோவில்கள், குடியிருப்புகளிலுள்ள கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வீடுகளில், பொதுமக்கள் களிமண்ணால் ஆன விநாயகர், விதை விநாயகர் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு பிடித்த, கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். இந்து முன்னணி சார்பில், தனியார் இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை, தனியார் விவசாய நிலத்தில் பிள்ளையார் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.கணக்கம்பாளையம் முல்லை நகர் வெற்றி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 10:30 மணிக்கு, யாக சாலை, கணபதி ேஹாமம், 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, வெற்றி விநாயகரை, மக்கள் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. முல்லை நகர் மற்றும் சுற்றுப்பகுதி குடியிருப்பு மக்கள் சமூக இடைவெளியுடன், சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். - நிருபர் குழு -