பதிவு செய்த நாள்
24
ஆக
2020
03:08
கரூர்: கரூர் மாவட்டத்தில், வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தமிழகத்தில், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான, வருமானம் ஈட்டும் கோவில்கள் திறக்கப்படவில்லை. கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மட்டும், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த கோவில்களில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பொது இடங்களில், சதுர்த்தி கொண்டாடதடை விதிக்கப்பட்டதால், வீடுகளில் பொதுமக்கள் சிறிய அளவிலான சிலைகளை வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள், சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்கள், ஊரடங்கால் மூடப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் வெளியே நின்று சுவாமியை வழிபட்டனர். கரூர் அண்ணா சாலையில் உள்ள, கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காலை , மூலவருக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு, கற்பக விநாயகருக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது.