பதிவு செய்த நாள்
24
ஆக
2020
03:08
சேலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, தங்க கவசத்தில் ராஜகணபதி ஜொலித்தார்.
தமிழகத்தில், ஊரடங்கால், பொது இடங்களில், விநாயகர் சிலை வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. கோவில் தரிசனத்துக்கும் அனுமதியில்லை. இதனால், மக்கள், வீடுகளில் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். சேலம், ராஜகணபதி கோவில் நடை, நேற்று காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டு, 7:00 மணி வரை, அபி?ஷகம், ஆராதனை நடந்தது. மூலவர் ராஜகணபதிக்கு, தங்க கவசம் அணிவித்து, தீபாராதனை நடந்தது. அர்ச்சகர்கள் மட்டும், சதுர்த்தி பூஜையை நடத்தி, தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில், பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்பட, 16 வகை அபி?ஷக பூஜை நடந்தது. வெண்ணெய் காப்பு அலங்காரத்தில், விநாயகர் அருள்பாலித்தார். மாலையில், தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்தார். பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால், நுழைவு பகுதியில் நின்று வழிபட்டனர்.
25 கிலோ: ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம், இரட்டை விநாயகர் கோவிலில், கொரோனா நீங்க வேண்டி, மஞ்சள் மூலம் விநாயகர் சிலை வடிவமைத்து வழிபட முடிவு செய்தனர். அதற்காக, மக்கள் வழங்கிய, 25 கிலோ மஞ்சளை ஒன்றாக திரட்டி, சிலையாக வடிவமைத்து, வேப்பிலை கட்டி, கொரோனா நீங்க வேண்டி வழிபாடு செய்தனர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்காடு, செல்வ விநாயகர் ஆலயத்தில், சிறப்பு பூஜை நடந்தது. பின், கோவில் கமிட்டியினர் சார்பில், 400க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும், விநாயகருக்கு சிறப்பு, அபி?ஷகம், ஆராதனை செய்து, விசேஷ அலங்காரத்தில், சதுர்த்தியை கொண்டாடினர்.
சிலை வைக்க முயற்சி: ஹிந்து முன்னணி, பா.ஜ., வினர், தடையை மீறி, சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவில் முன், 5 அடி உயர விநாயகர் சிலை வைத்து, பூஜை செய்ய முயன்றனர். இதையறிந்து, அஸ்தம்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஹிந்து அமைப்புகளுடன் பேச்சு நடத்தினர். பின், அங்குள்ள ஒரு கடையில், சிலையை வைத்து, பூஜை நடந்தது. இதையடுத்து, அனைவரும், கலைந்து சென்றனர்.