பதிவு செய்த நாள்
18
மே
2012
10:05
குரு பெயர்ச்சியையொட்டி, கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது, குரு பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு பெயர்ச்சி தங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டி, குரு பெயர்ச்சி அன்று மக்கள் கோவில்களுக்கு சென்று, குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்துகின்றனர். பக்தர்கள் வசதிக்காக, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. குரு பெயர்ச்சிஇந்த ஆண்டு குரு பெயர்ச்சி நேற்று நடந்தது. குரு பகவான் நேற்று மாலை 6.18 மணிக்கு, மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ந்தார். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இம்முறை குரு பெயர்ச்சி வியாழக்கிழமை வந்ததால், நேற்று அதிகாலையிலிருந்தே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர். பிற கோவில்களிலும், நவக்கிரகங்களில் ஒருவராக இடம் பெற்றுள்ள, குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நெய் தீபம்... கோவிலுக்கு வந்த பக்தர்கள், நெய் தீபம் ஏற்றியும், குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தியும் வழிபட்டனர். கோவிந்தவாடி அகரம் குரு கோவிலில், லட்சார்ச்சனையில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதப்பை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் குரு கோவில், கோவிந்தவாடி அகரம் குரு கோவில், ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.