பதிவு செய்த நாள்
02
செப்
2020
05:09
உத்தமபாளையம்: தென்காளஹஸ்தி எனப்படும் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராகு, மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்குக்கும், கேது, தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் நேற்று பகல் 2:16 மணிக்கு பெயர்ச்சி ஆயினர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு, கேது தனி தனி சன்னதியாக தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். காலஷர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை முதல் ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாகபாலாபிேஷகம் நடந்தது. பரிகார ராசிக்காரர்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. ராகு, சிம்ஹிகை தேவியின் கழுத்திலும், கேது, சித்ரகலாதேவியின் கழுத்திலும் தேவமந்திரங்கள் முழங்க மங்களநாண் சூட்டினர். இந்நிகழ்ச்சிகளை, கம்பம் கே.ஆர்.ஜெயப்பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கார்த்திகேயினி, தாசில்தார் உதயராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பெரியகுளம்: காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மூலவர் சிவன் அலங்காரத்தில் காட்சியளித்தார். ராகு, கேது சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கணேசன், ஸ்ரீராம் செய்திருந்தனர்.