உடுமலை, கணக்கம்பாளையம் முல்லை நகர் விநாயகர் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகரில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று ராகு கேது பெயர்ச்சியையொட்டி, கோவிலில், யாகசாலை அமைத்து சிறப்பு வேள்வி நடந்தது. விநாயகருக்கு அபிேஷகத்துடன் சிறப்பு அலங்காரம் நடந்தது. ராகு கேது சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜையுடன் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு, வேள்வியில் பங்கேற்றனர்.உடுமலை குட்டைத்திடல் சித்தி புத்தி விநாயகர் கோவிலில், ராகு கேது பெயர்ச்சியையொட்டி, சிறப்பு யாகம் நடந்தது.
பொள்ளாச்சி பொள்ளாச்சி ரயில்வே காலனியில், பவுர்ணமி நாக கன்னி அம்மன் கோவிலில், பவுர்ணமி மற்றும் ராகு, கேது சிறப்பு பூஜை நடந்தது. பூஜையையொட்டி காலை, 11:00 மணிக்கு அபிேஷகம், மதியம், 12:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதன்பின், ராகு, கேது பகவான் மதியம், 2:16 மணிக்கு மிதுன ராசியில் இருந்து ரிஷிப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையடுத்து சிறப்பு பூஜை நடந்தது.மதியம், 1:00 மணிக்கு, ராகு, கேது அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜையும், 2:00 மணிக்கு பரிகார அர்ச்சனை பூஜையும் நடந்தது. அதில், சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பரிகார ராசிக்காரர்கள், அர்ச்சனை செய்து வழிபட்டனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் ராகு, கேது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன - நிருபர் குழு -.