திருவாடானை: கொரோனா ஊரடங்கிற்கு பின் கோயில்களில் பக்தர்களை அனுமதித்தாலும் அர்ச்சனைக்கு அனுமதியில்லாததால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தபட்டதை தொடர்ந்து திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்கள் திறக்கபட்டன. இதனால் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
சிவாச்சாரியார்கள் கையில் விபூதி வழங்காததால் அங்குள்ள தட்டில் வைக்கபட்ட விபூதி, குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கின்றனர். அர்ச்சனைக்கு தடைவிதிக்கப்பட்டதை தெரியாத பக்தர்கள் வழக்கம் போல் அர்ச்சனை தட்டுடன் செல்கின்றனர். சிவாச்சாரியர்கள் அரசின் உத்தரவை கூறியதற்கு பின்பு கோயில் வெளியில் உள்ள கல்லில் சிதறு தேங்காய் உடைத்து செல்கின்றனர்.பக்தர் மோகன் கூறுகையில், கோயில் திறந்தும் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய முடியாதது வேதனை தருகிறது. தேங்காய்களை நாங்களே வெளியில் சிதறு தேங்காயாக உடைத்து செல்கிறோம். அரசு கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதிக்க வேண்டும், என்றார்.