பதிவு செய்த நாள்
04
செப்
2020
12:09
திருப்பூர்: புரட்டாசி சனிக்கிழமையில், கோவில்களில் கூட்டம் அதிகம் வரும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் தரிசனம் செய்ய, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.கடந்த, 1ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்தபடி சென்று, வழிபாடு நடத்தி வருகின்றனர். சிறிய கோவில்களில் அதிக கட்டுப்பாடு இல்லை.புரட்டாசி சனிக்கிழமை, வைணவ தலங்களில் பக்தர் கூட்டம் அலைமோதும். கொரோனா தடுப்பு விதிமுறைகள் வெளியிட்டபோது, திருவிழா நடத்தக்கூடாது என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதும், தரிசனத்துக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளதால், புரட்டாசி சனிக்கிழமையன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், நோய் தடுப்பு வசதிகளுடன், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு ஏற்பாடுகளை செய்ய, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பினர், போலீஸ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.