சிந்து சமவெளி நாகரிகம் அழிய பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்: ஆய்வில் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2020 04:09
வாஷிங்டன்: பருவநிலை மாற்றம் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நிஷாந்த் மாலிக், அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப கழகத்தில் ஆய்வாளராக உள்ளார். இவர், கடந்த 5,700 ஆண்டுகளுக்கு உண்டான தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம், பருவநிலை மாற்றம் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதுகுறித்து ஆய்வாளர் நிஷாந்த் மாலிக் தெரிவித்துள்ளதாவது:
தெற்காசிய குகைகளின் பொங்கூசிப் பாறைக் கனிமப் படிவுகளில், ஒரு குறிப்பிட்ட வகை ரசாயன இருப்பின் அளவை கணக்கில் எடுத்துக் கொண்டோம். இதன் மூலம் கடந்த 5,700 ஆண்டுகளில் அப்பகுதியில் பருவமழையின் அளவு பற்றிய தொகுதியை உருவாக்க முடிந்தது.
ஆனால் பண்டைய கால பருவநிலை காலத் தொடரை இப்போதைய கணித மாதிரிகளில் கண்டுப்பிடித்துப் புரிந்து கொள்வது பெரிய சவாலான பணியாக இருந்தது. பகுப்பாய்வின்படி இந்த நாகரீகம் உதயமாவதற்கு சற்று முன், பருவநிலையில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இந்த நாகரீகம் வீழ்ச்சியடைவதற்கு முன்பாக இந்த பருவநிலை மாற்ற வகைமாதிரி தலைகீழ் மாற்றம் அடைந்தது. இதனால்தான் பருவநிலை மாற்றமே சிந்து சமவெளி மாற்றத்துக்குக் காரணமாக நாங்கள் கூறுகிறோம். ஆனால் இதை நீக்கமற நிரூப்பிக்க இன்னும் தரவுகளும் ஆய்வு மாதிரிகளும் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சிந்து சமவெளி நாகரீகம் ஏன் அழிந்தது என்பதற்கு இந்தோ - ஆரியர்கள் என்ற நாடோடிகளின் ஊடுருவலே காரணம் என்பது உட்பட பல கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றன. பூகம்பமும் ஒரு காரணமாக சொல்லப்பட்டன. ஆனால் பருவநிலை மாற்றம் அதன் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று இந்த கண்டுபிடிப்பு, அந்த கோட்பாடு ஆய்வுகளின் வரிசையில் தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.