பதிவு செய்த நாள்
05
செப்
2020
11:09
பெரம்பலுார், சிறுவாச்சூர் கோயில் பூசாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால் மதுரகாளியம்மன் கோயில் தற்காலிகமாக நேற்று மூடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால், பக்தர்களுக்கான நெறிமுறைகளை வெளியிட்டு செப்., 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. இதன்படி, பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் கடந்த 1ம் தேதி பௌர்ணமி தினத்தையொட்டி முதன்முதலாக திறக்கப்பட்டது. இதன் பின்னர், வழக்கம்போல் வெள்ளிக்கிழமையான நேற்று மீண்டும் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில், இக்கோவில் பூசாரியான கனகராஜ்,47, என்பவருக்கு நேற்று முன்தினம் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, தெரியவந்ததையடுத்து கோயில் நேற்று காலையில் திறக்கப்பட்டு பூஜைக்கு பின் உடனே மூடப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால், சாமி தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் கோயிலுக்கு வெளியில் சாமி கும்பிட்டு சென்றனர். இதை தொடர்ந்து வரும் 6ம் தேதி கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, 7ம் தேதி திங்கட்கிழமை கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கோயில் பணியாளர்கள் சுமார் 20 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.