பதிவு செய்த நாள்
19
மே
2012
11:05
பண்ருட்டி : பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், கும்பாபஷேக புனரமைப்பு பணியின் போது, வராகி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், கும்பாபஷேகம் நடப்பதை முன்னிட்டு, இரண்டாம் ராஜ கோபுரத்திற்கும், கொடி மரத்திற்கும் அருகில், மின் விளக்கு கம்பம் அமைக்க, பள்ளம் தோண்டிய போது, இரண்டடி ஆழத்தில், வராகி சிற்பம் கிடைத்தது. கல்வெட்டு ஆய்வாளர், பண்ருட்டி தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது: வராகி சிற்பம், கி.ப., ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முதன் முதலில், பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தான், சிவன் கோவில்களில், சப்த மாதர் சிற்பத் தொகுதி அமைத்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. எனவே, 1,500 ஆண்டுகளுக்கு முன், திருவதிகை சிவன் கோவிலில், சப்த மாதர்கள் என்ற ஏழு அன்னையரின் சிற்பங்கள், வழிபாட்டில் இருந்தது தெரிகிறது. மகேசுவரி, வைஷ்ணவி, வராகி, பராமி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி என்பவர்களே சப்த மாதர்கள். இவற்றில், தற்போது கிடைத்துள்ள வராகியும், கோவிலுக்கு தென்திசையில் திலகவதியார் சன்னிதிக்கு அருகிலுள்ள, இந்திராணி சிற்பத்தையும் தவிர, மீதமிருந்த ஐந்து அன்னையர் சிற்பங்கள், காலப்போக்கில் மறைந்து விட்டன.
பன்றி முகத்துடன் காணப்படும் வராகி, திருமாலின் ஆற்றல் சக்தியால் உருவாக்கப்பட்டவள்; கறுப்பு வண்ண ஆடையை அணிந்திருப்பவள்; கலப்பையும், முசலத்தையும் ஆயுதங்களாகக் கொண்டு விளங்குபவள் என்பது, புராண சிறப்பு விதிமுறைகள். 86 செ.மீ., உயரத்தையும், 42 செ.மீ., அகலத்தையும் கொண்டு, நான்கு கைகளுடன் காணப்படும் இந்த வராகி சிற்பத்தின், மேல் இரண்டு கைகளில் கலப்பையும், முசலத்தையும் ஆயுதங்களாகக் காட்டாமல், நீண்ட வாளையும், பாசத்தையும் காட்டி படைத்திருப்பது புதுமையானது. இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.