பதிவு செய்த நாள்
10
செப்
2020
09:09
அயோத்தி: அயோத்தியில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு, கடவுள் ராமர் பெயர் வைக்கவும், சர்வதேச அந்தஸ்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், அயோத்தியில், விமான நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய பணிகளை அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கவும், மாநில அரசு கெடு விதித்துள்ளது.
இந்நிலையில், மாநில அரசு செய்தி தொடர்பாளர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டியவுடன், பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும். அதனால், விமான நிலையம் அமைக்கும் பணிகளை, அடுத்த ஆண்டுக்குள் முடிக்க கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு, கடவுள் ராமர் பெயரை வைக்கவும், அதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மாநில அரசு, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் சமர்பிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.