ஆர்.கே.பேட்டை: ஜாத்திரை திருவிழாவிற்காக, முச்சந்தியில் எழுந்தருளிய கங்கையம்மன் நேற்று காலை மீண்டும் நீர்நிலையில் கரைக்கப்பட்டார். திரளான பக்தர்கள், ஆரத்தி எடுத்து, அம்மனை வழியனுப்பி வைத்தனர்.
ஆவணி மாதத்தில் கிராம தேவதைக்கு நடத்தப்படும் ஜாத்திரை திருவிழா உற்சவம் ஆர்.கே.பேட்டையில் நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கும்பம் படைத்தல், நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆர்.கே.பேட்டை பஜார் முச்சந்தியில், வேப்பிலை குடிலில் எழுந்தருளிய கங்கையம்மனுக்கு, திரளான பக்தர்கள் மாவிளக்கு ஏந்தி வந்து, கும்பம் படைத்தனர்.நேற்று காலை 6:00 மணியளவில், கங்கையம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலையில் கரைக்கப்பட்டார். பக்தர்கள் ஆரத்தி எடுத்து அம்மனை வழியனுப்பி வைத்தனர். நீர்நிலையில் இருந்து எடுக்கப்பட்ட களிமண்ணால், கங்கையம்மன் சிலை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.