பதிவு செய்த நாள்
11
செப்
2020
10:09
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தர்மபுரி மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். கொரோனா ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்து, வழிபாட்டு தலங்களை திறக்க, அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில் நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜை நடத்தப்பட்டன. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டனர். இதில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை, கோவில் நிர்வாகம் சார்பில், கிருமி நாசினி தெளித்தும், காய்ச்சல் உள்ளதா என பரிசோதித்தும் கோவிலினுள் அனுமதிக்கப்பட்டனர். வெளிமாநில பக்தர்கள் கோவிலுக்கு வராததால், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.