விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு: டுவிட்டரில் டிரெண்டிங்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2020 02:09
புதுடில்லி : சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடந்த உலக சமயங்களின் பார்லிமென்ட்டில் உரையாற்றிய தினமான இன்று(செப்., 11) டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது.
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த சமயத் தலைவர்களுள் சுவாமி விவேகானந்தரும் ஒருவர். இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் ஆன்மிக சொற்பொழிவுகளும், கருத்துக்களும் இளைஞர்களை எழுச்சி அடைய செய்யும் விதமாக அமைந்தது. அதனால் இன்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக பார்க்கப்படுகிறார். இந்தியா மட்டுமல்ல மேலைநாடுகளிலும், அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
குறிப்பாக 1893ம் ஆண்டு, செப்., 11ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக சமயங்களின் பார்லிமென்ட் சொற்பொழிவில் இவர் ஆற்றிய உரை யாராலும் மறக்க முடியாது. தனது உரையை, எனது அருமை அமெரிக்க சகோதர, சகோதரிகளே என்று தான் ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் பேசிய சொற்பொழிவுகள் கேட்டு அன்றைக்கு அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வாயடைத்து போனார்கள். யார் இந்த இளைஞர் என அன்று இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்த்தன. அந்த கூட்டத்தில் அவர் எவ்வளவோ விஷயங்கள் பேசியிருந்தாலும் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அது, சகிப்புத்தன்மை மற்றும் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ள ஒரு மதத்தை சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என பேசினார்.
127 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் (செப்.,11) விவேகானந்தர் பேசிய உரையை டுவிட்டர் தளவாசிகள் டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர். #VivekanandInChicago, #SwamiVivekananda ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்டிங்கில் 10 இடத்திற்குள் இருந்தன. இரண்டையும் தனித்தனியாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீ-டுவீட் செய்துள்ளனர்.