திருப்பதி : திருமலையில் நடக்கவுள்ள ஏழுமலையான் பிரம்மோற்ஸவத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
திருமலையில் செப்.19ம் தேதி முதல் 27ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடக்க உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஆந்திர அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். செப். 23ம் தேதி மாலை நடக்கவுள்ள கருட சேவையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 24ம் தேதி காலை ஏழுமலையானை ஆந்திர முதல்வருடன், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் தரிசித்து நாதநீராஜன மண்டபத்தில் நடக்கும் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்கிறார்.பின் திருமலையில் கர்நாடக சத்திரம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கர்நாடக முதல்வருடன் ஆந்திர முதல்வரும் பங்கேற்கிறார்.