பதிவு செய்த நாள்
14
செப்
2020
09:09
ஈரோடு: தற்காலிக கொடிமரத்துடன், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், பிரமோற்சவ விழா நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், விழா நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பிரமோற்சவ விழா, வரும், 20ல் தொடங்கி, 30ல் நிறைவு பெறுகிறது. 26ல் மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணம்; 27ல் காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. கோவிலில் தற்போது, பழைய கொடிமரத்தை அகற்றி, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், தங்க கொடிமரம் உருவாக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமை, புது கொடிமரம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பிரமோற்சவ விழாவுக்கு, தற்காலிக கொடிமரம் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கங்காதரன் கூறியதாவது: கஸ்தூரி அரங்கநாதர் கோவில், வருடாந்திர பிரமோற்சவ விழா குறித்து, கலெக்டர் கதிரவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கொரோனா பரவலை தடுக்க, 100 பேர் மட்டுமே வடம் பிடிக்க வேண்டும். மற்ற உற்சவங்கள் அனைத்தும், கோவில் வளாகத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கொடியேற்றத்துடன் விழா நடத்த வேண்டிய அவசியம் என்பதால், ஆகம விதிகளின்படி, பட்டாச்சாரியார்கள் ஆலோசனை பெற்று, தற்காலிக கொடிமரம் பிரதிஷ்டை செய்து, விழா தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்து முன்னணி மனு: கோவிலில் புதிதாக கொடிமரம் அமைத்த பின், பிரமோற்சவ விழாவை நடத்த, ஹிந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன், கலெக்டர் கதிரவனிடம் மனு அளித்துள்ளார்: மனு விபரம்: கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புது கொடிமரம் அமைக்கும் முன், புரட்டாசி பிரமோற்சவ விழா நடத்துவது ஆகம விதிமுறைக்கு புறம்பானது. கொடியேற்றி விட்டுதான் விழா துவங்க வேண்டும். கொடிமரமின்றி விழா நடத்தக்கூடாது. திட்டமிடாமல் அவசர கதியில், ஏற்பாடு நடக்கிறது. புதிய கொடிமரத்தை பிரதிஷ்டை செய்த பிறகே, பிரமோற்சவ விழா நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.