ஒரு மனிதன் உறவுகள் இன்றி வாழ முடியாது. அப்படி தனிமையில் வாழ்ந்தால் சந்தோஷம் இருக்காது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. பிறர் மீது குற்றம் மட்டுமே காண்பவருக்கு வேண்டியவர் என யாரும் இருக்க மாட்டார்கள். எனவே உறவினர்களை ஆதரிக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது. உறவுகளுக்குள் அவ்வப்போது கருத்துவேறுபாடு, சச்சரவு, பிரிவு வரத்தான் செய்யும். அவற்றை மன்னித்து மறந்து விட வேண்டும். என்றைக்கோ நடந்த கசப்பான நிகழ்வை திரும்ப திரும்ப நினைக்க வேண்டிய அவசியமில்லை. இறைவனுக்கு அடுத்தபடியாக அதிகம் பயப்பட வேண்டியது உறவுகளுக்குத்தான். அவர்களின் மகிழ்ச்சியில் தான் இறைவனின் மகிழ்ச்சி இருக்கிறது. உங்களுக்கு ஆயுள் அதிகரிக்க வேண்டுமா? உங்களது உறவுகளை இணைத்து வாழுங்கள். உலகத்திலேயே ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது என்றால் அது உறவுகளை துண்டித்து வாழ்வதற்குத்தான் வழங்கப்படும் என்கிறார் நாயகம். எனவே விட்டுப்போன உறவுகளை இப்போதே புதுப்பிப்போம். நேசக்கரம் நீட்டுவோம்.