சிவன் கோயில்களில் அறுபத்து மூவர் சன்னதியை தரிசித்திருப்பீர்கள். அதில் அனைவரும் நின்றிருக்க ஒரு பெண் மட்டும் அமர்ந்திருப்பார். அவர் தான் காரைக்கால் அம்மையார். இவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு...சிவபெருமானே கொடுத்த வரம் இது. ஒருமுறை கயிலாயத்தில் பார்வதி, ‘‘ சுவாமி! மீனாட்சியாக நான் அவதரித்த போது மலையத்துவஜன், காஞ்சனமாலை எனக்கு பெற்றோராக இருந்தனர். தாட்சாயிணியாக அவதரித்த போது தட்சன் என் தந்தையாக இருந்தார். இப்படி எனக்கு பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு பெற்றோர் இல்லையே!’’ என்றாள். ‘‘பெற்றோர் இல்லாதது நல்லது தானே! அதனால் உனக்கு மாமனார், மாமியார் இல்லையே’’ என கிண்டல் செய்தார் சிவன். ‘‘ மாமனார், மாமியார் இருந்தால் தானே என் வாழ்க்கை முழுமை பெறும்’ என்றாள் பார்வதி. ‘‘கவலைப்படாதே! எனது தாயாரும், உனது மாமியாருமான காரைக்கால் அம்மையார் இப்போது வந்து கொண்டிருக்கிறார்’’ என்றார் சிவன். அவரைக் காண பார்வதியும் ஆவலுடன் காத்திருந்தாள். காரைக்கால் அம்மையாரின் தெய்வீக சக்தியைக் கண்ட கணவர் பரமதத்தன், மனைவியை தெய்வமாகக் கருதினார். பதறிய அம்மையார், கணவரே தன்னை வணங்குவதை எண்ணி வருந்தினார். அதற்கு பிராயசித்தமாக தன் இளமை கெட்டு பேய் வடிவமாக மாற வேண்டும் என சிவனை வேண்டினார். பேய்வடிவம் பெற்ற அவர், கயிலை மலையை காலால் மிதிக்க கூடாது எனக் கருதி தலை, இரு கைகளை ஊன்றி கயிலாய மலையேறினார். அதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட சிவன் ‘அம்மையே‘ என அழைத்தார். அம்மையாரும் ‘அப்பா’ என அழைத்து மகிழ்ந்தார். அவரைத் துாக்கி அருகில் அமர்த்திக் கொண்ட சிவன், ‘மாமியார் இல்லையே என குறைபட்டாயே பார்வதி... இவர் தான் உன் மாமியார்’’ என்று கூற பார்வதியும் மகிழ்ந்தாள். நாயன்மார்களில் ஒருவராகும் வாய்ப்பை அம்மையார் பெற்றார். சிவனின் தாய் என்பதால் நாயன்மார்களில் இவர் மட்டும் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார்.