பதிவு செய்த நாள்
18
செப்
2020
01:09
மேட்டுப்பாளையம்: பிரசித்தி பெற்ற மகாளய அமாவாசை நாளில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளய அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், கோவில்களுக்குச் சென்று சுவாமியை வழிபடுவது வழக்கமாகும். ஆண்டுக்கு ஒரு முறை வரும் முக்கியமான அமாவாசை என்பதால், ஒவ்வொரு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்தாண்டு ஆற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க தடைசெய்யப்பட்டு இருந்தது. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் நடை வழக்கம் போல், காலை, 5:00 மணிக்கு திறந்து, அம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. ஆனால் வைரஸ் தொற்று காரணமாக, கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. மேலும், காலையில் அனல் பறக்கும் வெய்யில் அடித்ததால், பக்தர்கள் கோவிலில் இருந்து பகாசூரன் சிலைக்கு சிரமம் இல்லாமல் நடந்து சென்று சுவாமி கும்பிட, கோவில் நிர்வாகத்தினர் மேட் விரித்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.