பதிவு செய்த நாள்
19
செப்
2020
08:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழாவில் சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு புரட்டாசி மாதம், 5 சனிக்கிழமைகளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். பக்தர்கள் கொண்டு வரும் காய்கறிகள், உணவு பொருட்களை தாசர்களுக்கு படைத்து, அவர்கள் வழங்கும் பொருட்களை, பெற்றுச் சென்று பொங்கலிட்டு, விரதத்தை முடிப்பது வழக்கம். ஆனால் தற்போது வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக, கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அளவை குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு அறிவிப்பின்படி, அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி ஒவ்வொரு சனிக்கிழமை விழாவில், சமூக இடைவெளி பின்பற்றி, தரிசனம் செய்ய அதிகபட்சமாக, 3,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் பதிவு செய்து இலவச அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எனவே,www.karamadaiaranganathar.org என்ற வலைதளத்தில் பதிவு செய்து, அனுமதி சீட்டு பெற வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். குறைந்தபட்சம் ஆறு அடி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். உடல் வெப்பநிலையை அறிய தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனைக்கு பின்பு, நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே, கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், எந்த விதமான பூஜை பொருட்களையும் கொண்டுவருவதும், தாசர்களிடம் கொடுப்பதும், வாங்குவதும் தவிர்க்க வேண்டும். நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.