பதிவு செய்த நாள்
19
செப்
2020
01:09
உடுமலை: உடுமலை உடுமலை ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதியில்லை, என முடிவு செய்யப்பட்டது. உடுமலை- மூணாறு ரோட்டில் உள்ள, ஏழுமலையான் வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்ல, ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும், பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதியளித்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தாண்டு, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி குறித்து சிக்கல் நீடித்து வந்தது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், கட்டுப்பாடுகளுடனும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்க மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டிருந்தது.ஆனால், அடர்ந்த வனப்பகுதி, முகக்கவசம் அணிந்து, கரடு, முரடான மலைப்பாதையில் பக்தர்கள் நடக்க முடியாத சிக்கல், உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாதது ஆகிய காரணங்களினால், இந்தாண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: கோவிலுக்கு, வாரம் தோறும், 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் வரை பக்தர்கள் வரும் வாய்ப்புள்ளது. அதனால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. வழக்கம் போல், கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கும். வனத்துறை, போலீஸ் மூலம், கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஒன்பதாறு செக்போஸ்ட், சின்னாறு செக்போஸ்ட் மற்றும் ஏழுமலையான் கோவில் மலையடிவார வனப்பகுதி வழித்தடத்தில் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பப்படுவர். எனவே, பக்தர்கள் யாரும், ஏழுமலையான் கோவிலுக்கு வர வேண்டாம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.