அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோவில் நேற்று மூடப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அன்னூர் அடுத்த மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. வைரஸ் பரவல் காரணமாக, இக்கோவிலில், பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் இத்தகவல் தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் முன் குவிந்தனர். அனுமதி தராததால் கோவிலின் முன்புறம் உள்ள தீப கம்பம் முன் கற்பூரம் ஏற்றி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுகுறித்து, கோவை அடுத்த கோணவாய்க்கால்பாளையம், பக்தர்கள் கூறுகையில், எங்கள் ஊரில் இருந்து மூன்று தலைமுறையாக, மாட்டு வண்டி வைத்து, புரட்டாசி சனிக்கிழமைகளில், இங்கு வந்து வழிபடுவது வழக்கம். இன்று 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை. காரமடை ரங்கநாதர் கோவில் உட்பட பல கோவில்களில், அனுமதிக்கின்றனர். ஆனால் இங்கு மட்டும் தடை விதிப்பது சரியல்ல என்றனர்.