பதிவு செய்த நாள்
19
செப்
2020
03:09
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிேஷகம், திருவீதியுலா என, பூஜைகள் களைகட்டியிருக்கும். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு, பக்தர் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், உரிய முன்னேற்பாடு செய்ய வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். வருவாய்த்துறையுடன் ஆலோசித்து, அறநிலையத்துறை அதிகாரிகள், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுகளை வழக்கம் போல் நடத்த திட்டமிட்டனர்.
பக்தர் வந்து செல்ல நிழல்பந்தல், தடுப்பு வேலி அமைப்புகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், பக்தர்கள் நலன்கருதி, புரட்டாசி சனிக்கிழமைகளில், பக்தர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மாவட்டத்தில், அவிநாசி அருகேயுள்ள மொண்டிபாளையம் வெங்கடேசபெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், கோவில்பாளையம் ராமசாமிகோவில், திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் உட்பட, அனைத்து பெருமாள் கோவில்களிலும், பக்தர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உதவி கமிஷனர் வெங்கடேஷ் கூறியதாவது:கோவில் நிர்வாக அமைப்பினர், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து, பக்தர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கப்படி, அனைத்துவகை பூஜைகளும் நடக்கும்; தரிசனம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர் கூட்டம் சேர்வதுடன், குழந்தைகள், முதியோர்களும் வருவார்கள்; தொற்று பரவும் அபாயம் இருப்பதால், ஐந்து சனிக்கிழமைகளிலும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
ஏன் இந்த குழப்பம்! புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து, அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையினரிடம் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது. நாள் நெருங்க ஒரு முடிவு எடுக்கப்படாததால், பொங்கலுார் ராமசாமி கோவில், திருப்பூர் பெருமாள் கோவில் உட்பட பல கோவில்களில், பக்தர்கள் தரிசன ஏற்பாட்டுக்கான அனைத்து வேலைகளையும் கோவில் நிர்வாகத்தினர் ஜரூராக செய்தனர்.ஆனால், திடீரென்று நேற்று காலை, அந்த போலீஸ் உட்கோட்டத்தில், கூட்டம் நடத்தி பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிப்பதென அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த பக்தர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே, கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், புரட்டாசி சனிக்கிழமையும் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டுமென்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.