பதிவு செய்த நாள்
20
செப்
2020
03:09
திண்டிவனம்; இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் வற்றி, மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதுச்சேரி--திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டி டோல்கேட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு எதிரிலேயே 20 அடிக்கு மேல் ஆழமுள்ள குளம் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் குளத்திற்கு சென்று வருவதும், மீன்களுக்கு உணவு அளிப்பதும் வழக்கம்.கடந்தாண்டு பெய்த மழையில் எதிர்பார்க்காத அளவிற்கு குளத்தில் நீர் நிரம்பியது. இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் வளர்ந்து வருகிறது. இந்த கோவில் நிர்வாகம், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.கொரோனா நோய் தொற்று காரணமாக, பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால், கோவில் வளாகம் பராமரிக்கப்படவில்லை. கடந்த காலங்களில், அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன், குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருக்க நீர் மோட்டார் மூலம், தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது.தற்போது, பல்வேறு பிரச்னைகள் காரணமாக, கோவில் குளம் பராமரிக்கப்படாமல் உள்ளது.கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது குளம் வற்றி வருவதையும், மீன்கள் இறந்து வருவதையும் பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே குளத்தில் நீர் மோட்டார் மூலம் தண்ணீரை நிரப்பி, மீன்கள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.