அந்த நல்ல சேதியை தோழியின் மூலம் கேள்விப்பட்டாள் பர்வதம். ‘‘காஞ்சி மகாசுவாமிகள் சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லுாரியில் முகாமிட்டிருக்கிறார். கன்னி பெண்களுக்கு நல்ல மணவாழ்வு அமைவதற்காக பவானியம்மன் படத்தை பக்தர்களுக்கு கொடுக்கப் போகிறார்’’ மகாசுவாமிகளை தரிசித்து அம்மன் படத்தைப் பெற விரும்பினாள் பர்வதம். சகோதரனிடம் கேட்க அவனும் அழைத்துச் செல்ல சம்மதித்தான். மறுநாள் இருவரும் புறப்பட்டனர். அண்ணனின் வேகமான நடைக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. வேகமாக நடந்த அவன் வரிசையில் போய் நின்றான். தாமதமாக வந்த பர்வதம் வரிசையில் பின்னாலே நிற்க நேர்ந்தது. அருகில் வந்ததும். ‘யாருக்காக வந்திருக்கிறாய்? உன்னுடன் சகோதரி வந்திருக்கிறாளா?’ எனக் கேட்டார் மகாசுவாமிகள். ‘‘ஆமாம் சுவாமி! என் சகோதரி பின்னால் நிற்கிறாள். அவள் வரும்வரை இங்கு காத்திருக்கலாமா?’’ எனக் கேட்டான் சுவாமிகள் சிரித்தபடி, ‘‘உன் சகோதரி பெயர் என்ன?’’ என்றார். `பர்வதம்` என்றான். ‘‘இங்கே பர்வதம்னு யார் இருக்கிறார்கள்? பர்வதம் பர்வதம்!’’ என சுவாமிகள் உரத்த குரலில் இருமுறை அழைத்தார். பர்வதம் மெய் சிலிர்த்துப் போனாள். வரிசையை விட்டு விலகி `நான் தான் சுவாமி பர்வதம்` என ஓடி வந்தாள். ‘‘உனக்காக முன்கூட்டி வந்து காத்திருக்கிறான் உன் அண்ணா. இந்தா... பவானி அம்மன் படம். வீட்டில் வைத்து பூஜை செய். ேக்ஷமமாக இரு!’’ என்று அம்மன் படத்தை கொடுத்து ஆசியளித்தார். அண்ணனும், தங்கையும் மகாசுவாமிகளை வணங்கி விடை பெற்றனர். பர்வதத்திற்கு நல்ல இடத்தில் திருமணம் அமைந்தது. வாழ்நாள் இனிதாக கழிந்தது. இப்போது எண்பது வயதாகி விட்டது. நிம்மதிக்கு குறைவில்லை. ‘பர்வதம் பர்வதம்...’ என மகாசுவாமிகள் உரத்துக் கூப்பிட்ட தருணத்தை இன்னும் அவள் மறக்கவில்லை. முதுமை அடைந்தாலும் சுவாமிகளின் அருள் நம்முடன் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறாள். சுவாமிகளை குறித்த பாடல்களை எழுதியபடி பொழுதைக் கழிக்கிறாள். சுவாமிகளுடன் அவளுக்கு ஏற்பட்ட ஒருநாள் சந்திப்பு வாழ்வு முழுமைக்கும் நிம்மதி அளித்தது என்றால் மிகையில்லை.