குலசேகராழ்வாரின் பாடல்கள் ஏழுமலையானின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. பாடல் ஒன்றில் திருப்பதி குளத்தில் நாரையாகப் பிறக்க வேண்டும் என வேண்டுகிறார். நாரை இரை தேடி திருப்பதியை விட்டு எங்காவது செல்லும் என்பதால் அடுத்த பாடலில் மீனாகப் பிறவி தர வேண்டுகிறார். ஏனென்றால் மீன் குளத்தை விட்டு வெளியே போகாது அல்லவா? அதுவும் மாறி விடுகிறது. யாராவது மீனைப் பிடித்தால் என்ன செய்வது என்ற கேள்வி வருகிறது. இப்படியே ஏழுமலையானுக்கு ஏவல் செய்யும் பணியாள், மலைத் தோட்டத்தில் செண்பக மரம், புதர், மலைப்பாறை, காட்டாறு, அடியார் ஏறும் மலைப்பாதையாக இருக்க ஆசைப்படுகிறார். பெருமாளை எப்போதும் தரிசிக்கும் ஆசையில் ‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என கதறுகிறார். கடைசிப் பாடலில், திருவேங்கட மலையில் ஏதேனும் ஆவேனே’ என பெருமாளின் மனசு போல ஏதாவது ஒன்றாகப் பிறந்தால் போதும் என்ற வேண்டுகோளுடன் பாட்டை முடிக்கிறார்.