ஆன்மிகத்தில் உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் முக்கியம். உள்ளம் தனது எண்ண ஓட்டங்களை இழுத்துப் பிடித்து ஒருமுகப் பட்டால்தான் ஆற்றலுடன் விளங்க முடியும். இதற்கு சந்திரனின் அனுக்கிரகம் முக்கியம். பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். அதன் குளிர்ந்த கிரணங்கள் நம்மைச் சுற்றி உள்ள பிரதேசங்களை மட்டுமின்றி நமது தேகத்தையும் ஊடுருவும். நம்முடைய உடம்பும் உள்ளமும் ஆன்மாவும் கிரணங்களால் கழுவப்பட்டு தூய்மை அடையும். சராசரி மனிதன் சந்திரனின் அற்புத சக்தியை அத்தனை எளிதாய் கிரகித்துக் கொள்ள முடியாது. ஆனால் அண்ணாமலையில் பவுர்ணமியன்று வலம் வந்தால், சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம். இதனால் பாவங்களைப் போக்கி, பிணிகளை அகற்றும். தோஷங்கள் நீங்கும். மானிட சக்தி பரிபூரணமாய் கிடைக்கும் என்பது திண்ணம்.