பதிவு செய்த நாள்
22
செப்
2020
06:09
சந்திரன், சாதாரண கண்களுக்கும் புலப்படும் கிரகம். பகலில், சூரிய கிரணத்தில் மறைந்திருப்பதால், பார்க்க இயலாது; இரவில் நன்றாகப் பார்க்கலாம். தேய்ந்தும் வளர்ந்துமாக மாறுபவன், சந்திரன். பரம்பொருளின் மனதிலிருந்து வெளிவந்தவன் என்கிறது வேதம் (சந்திரமா மனஸோஜாத:) பரம்பொருளானது பிரபஞ்சாகாரமாகத் தோற்றம் அளிக்கிறது. உடல் எடுத்த உலகின் மனமான சந்திரன், பருவங்களை உருவாக்கி, உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான் என்கிறது வேதம் (சந்திரமா: ஷட்ஹோதா. ஸரிதூன்கல்பயாதி) ஏதும் அறியாத குழந்தையும் சந்திரனைப் பார்த்து மகிழும்; தொண்டு கிழமும் மகிழும்.
இளைஞர்களின் மனத்தை, விரும்பியவளுடன் சேர்த்து மகிழ வைப்பவன் சந்திரன். அதுமட்டுமின்றி, உயிரினங்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பவனும் இவனே ! மனித இனத்தை இயக்குபவன் என்று சந்திரனைக் குறிப்பிடுகிறது ஜோதிடம்(மனஸ்துஹினகு...). தேய்ந்தும் வளர்ந்தும் மாறி மாறித் தென்படும் இயல்பு, மனித மனத்திலும் வெளிப்படும். செடி-கொடிகளின் மருத்துவகுணத்தை, சந்திரனின் கிரணங்கள் உருவாக்குகின்றன (ஸோமோவா ஓஷதீனாம் ராஜா...) பவுர்ணமியில், கடல் அலையை அதிகம் எழச் செய்பவன். இரவில் மலரும் பூக்கள், சந்திரனைக் கண்டதும் குதூகலத்துடன் காட்சி தரும். அதுபோல், பிரபஞ்சப் பொருட்களில், சந்திரனின் தாக்கம் தென்பட்டு மாறுபாட்டைச் சந்திக்கும். வெகுதொலைவில், விண்வெளியில் வலம் வந்தாலும், சந்திரனது தாக்கம் பிரபஞ்சத்தை மட்டுமின்றி, மனிதர்களையும் பாதிக்கும். ஆகாயம் என்ற பூதம் ஒன்றுதான்; அது உலக அளவுக்குப் பரவியிருக்கிறது. ஆகாயம் என்றால் இடைவெளி என்று அர்த்தம். இடைவெளியில் வாழ்கிற நமக்கு, இடைவெளியின் தாக்கம் இருக்கும் என்பதில் ஆச்சிரியம் ஏதுமில்லை.
உலகின் ஒரு கோடியில் நிகழும் சம்பவத்தை, மறு கோடியில் இருந்தபடி சின்னத்திரை வழியே பார்க்கிறோம். அதற்கு ஆகாசத்தின் பங்கு தவிர்க்க முடியாதது. சூரியனிடம் இருந்து சூடான கிரணத்தைப் பெற்று, தன்னிடம் இருக்கிற தண்ணீருடன் இணைத்துக் குளிரச் செய்து, வெப்பத்தால் வாடும் உலகைக் குளிர்வித்து மகிழச் செய்கிறான் சந்திரன் (ஸலிலமயே சசினி...). தண்ணீருடன் தென்படுவதால், கடக ராசியான ஜல ராசி அவன் இருப்பிடம் என்கிறது ஜோதிடம். கடகம் என்றால் நண்டு. அது, ஈரப்பதமான இடத்தில் வாழும். ஆகவே, ஈரமான மனம், கருணையுள்ளம் கொண்டவன் என்பதற்குப் பொருத்தமானவன் , சந்திரன் ! அமாவாசையில், சூரியனில் மறைந்த சந்திரன், ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக கிரணத்தைப் பெற்று வளர்ந்து, 15-ஆம் நாளில் முழு நிலவெனக் காட்சி தருவான். அதனை பவுர்ணமி என்கிறது வேதம் (பஞ்சதச்யாமா பூர்யதெ...) பிரதமையில் இருந்து சூரியன், தனது கிரணத்தைத் திரும்பப் பெறும்போது, ஒவ்வொரு பகுதியாகத் தேய்ந்து தேய்ந்து, சூரியனில் ஒன்றிவிடுவதை அமாவாசை என்பார்கள் (பஞ்சதய்யாமபுஷீயதை). ஒவ்வொரு பிறையாக வளர்வதால், வளர்பிறை; ஒவ்வொரு பிறையாகத் தேய்வதால் தேய்பிறை என்றாகிவிட்டது. ஒவ்வொரு பிறையிலும் தடங்கலின்றி வளர்வதால், செயல்களும் வளர்ந்தோங்க வேண்டும் என்று, வளர்பிறையை ஏற்றனர். தேய்பிறையை தென்புலத்தார் பணிவிடைக்கு ஒதுக்கினார். சந்திர கிரகணத்தில் பிடிக்கும் வேளை வளர்பிறையானதால், தான-தருமங்களைச் செய்யச் சொன்னார்கள். விடும் வேளையில் பிரதமை என்பதால், தேய்பிறையைக் கொண்டு தர்ப்பணம் செய்யப் பரிந்துரைத்தனர்.
ஈசனின் சிரசில் சந்திரன் வீற்றிருப்பதால், சந்திரசூடன் என சிவனாருக்குத் திருநாமம் உண்டு. அதேபோல், அம்பாளின் சிரசிலும் விநாயகரின் சிரசிலும்கூட சந்திரன் வீற்றிருக்கிறான் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணரின் கண்ணாகத் திகழ்கிறது எனச் சந்திரனைக் குறிப்பிடுவர். சந்திரனுடன் கூடிய சூரியனில், அதாவது அமாவாசை மற்றும் பவுர்ணமி, வேள்வி செய்ய வேண்டிய வேளை என்கிறது வேதம் ! முழு நிலவில் இணைந்த நட்சத்திரங்களை, அதன் பெயரைக் கொண்டே மாதங்களின் பெயர்களாக ஏற்றனர். பவுர்ணமியில் சித்திரை நட்சத்திரம் இணைந்து வர... சித்திரை என அந்த மாதத்துக்குப் பெயர் வந்தது. மற்ற மாதங்களுக்கு, பவுர்ணமியைக் கொண்டே பெயர் வரும். அதாவது, காலத்தை அளக்கும் கருவியாகத் திகழ்பவன் சந்திரன் ! அதனைச் சாந்திர மானம் என்பார்கள். விரதங்களையும் பூஜைகளையும் சாந்திர மானத்தைக் கொண்டே கணக்கிடுவார்கள். அமாவாசையில் சூரியனில் ஒடுங்கிவிடுவதால், பலமிழந்து விடுவான் சந்திரன். ஆகவே அந்த வேளையில், மனநோய்கள் வலுப்பெறும் என்கிறது ஜோதிடம். மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை, நோயின் ஏற்றத்தாழ்வு சுட்டிக்காட்டும். சாதாரண நோய்கள்கூட அமாவாசை நெருங்கும் நாட்களில் வலுப்பெறும். உடல், புலன்கள், மனம், ஆன்மா ஆகியவற்றின் இணைப்பும் அதன் தொடர்ச்சியுமே வாழ்க்கை என்கிறது ஆயுர்வேதம். இதில் முக்கியமானது மனம் ! ஆகவே, வாழ்வில் சந்திரனுக்கு நிரந்தரப் பங்கு இருக்கிறது. நல்ல காரியங்களைச் செயலாற்ற சந்திர பலம் வேண்டும் என்கிறது சாஸ்திரம் (சந்திர பலம் ததேவ.) சந்திர பலம் இருந்துவிட்டால், மனமானது ஈடுபாட்டுடன் செயலாற்றும்.
ஆயிரம் பிறை கண்டவனை, சதாபிஷேகம் செய்வித்து மகிழ்விப்பவன், சந்திரன் மாசி பவுர்ணமியின் இரவில் சந்திர பூஜை நிகழும். அப்போது பால் பாயசம் நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கும் அனைவருக்கும் அளிக்கிற வழக்கம், கிராமங்களில் இன்றைக்கும் உண்டு ! தென்புலத்தார், தேவர்கள், ரிஷிகள் ஆகியோரது பணிவிடைகளில் சந்திரனின் பங்கு இருப்பதால், வாழ்வு சிறக்க அவனருள் வேண்டும். விண்வெளியில் முதல் ஓடுபாதை, சந்திரனுடையது ஆகவே, பூமிக்கு அருகில் இருப்பவன் அவன் ! அவனுக்கு மேல், நான்காவது ஓடுபாதையில் இருக்கும் சூரியனிடம் இருந்து கிரணத்தைப் பெற்றுச் செயல்படுவான் சந்திரன். ராசிச் சக்கரத்தில், சந்திரனுக்கு அடுத்த ராசியில், அதாவது சிம்மத்தில் சூரியனுக்கு இடமளித்திருக்கிறது ஜோதிடம். ஆன்மாவுடன் இணைந்து மனம் செயல்படுவது போல், சூரிய கிரணத்துடன் இணைந்து செயல்படுவான், சந்திரன் ! ஆகவே, அடுத்தடுத்த வீடு பொருத்தமாக அமைந்துள்ளது. ஆன்மா ஒன்று; அதேபோல் மனமும் ஒன்று ! ஆதலால், 12 வீடுகள் இருந்தும் , இரண்டுபேருக்கும் ஒவ்வொரு வீடுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுகத்தை அதாவது மகிழ்ச்சியை மனம் அறியும். ஆகையால், ராசி புருஷனில் 4-ஆம் வீட்டில் சந்திரனுக்கு இடமளித்தனர். வளர்பிறையில் சந்திரன் நல்லவன்; சுப பலனையே அளிப்பான். தேய்பிறையில் பலம் குன்றியவன்; அசுபன்-விருப்பமில்லாத பலனையே திணிப்பான் ! குருவுடன் இணைந்து பொருளாதாரத்தைச் செழிப்பாக்குபவன் சந்திரன். தன்னுடைய கேந்திரங்களில் குரு இருந்தாலும் அதாவது 4,7,10-ல் இருந்தாலும் பணத் தட்டுப்பாடின்றி காரியத்தை நிறைவேற்றி வைப்பான் சந்திரன். 5,9-ல் குரு இருந்தால், ஆன்மிக வாழ்வில் ஆர்வத்தைத் தூண்டுவான் ! பூமியும் விண்வெளியும் சேர்ந்தே இருந்தது. பிறகு, அது அகண்ட இடைவெளியுடன் தனித்தனியே காட்சி அளித்தது. பூமியில் மண், சந்திரனில் ஒட்டியுள்ளது. அதில் தென்படும் கறுப்புப் புள்ளி, மண் எனத் தெரிவிக்கிறது வேதம் (யதத: சந்திரமஸி கிருஷ்ணம் ஊஷான்னிவபன்...). இப்படியான விலகல், நமக்கு வாழ இடத்தை அளித்தது. முக அழகை, சந்திரனுடன் ஒப்பிடுவார்கள் புலவர் பெருமக்கள். பகலில், வெப்பத்தில் சூடேறிய நதிகள், தடாகங்கள் ஆகியவற்றின் நீரைக் குளிரச் செய்து, வெதுவெதுப்பாக மாற்றி, அதில் நீராடுவதற்கு நமக்கு உதவுபவன், சந்திரன், சந்திர கிரணத்தின் சேர்க்கையால், குளிர்ந்த காற்று கிடைக்கிறது. அதேபோல், சந்திரன் இணைந்தால்தான், வேள்வியானது நிறைவுபெறும் (ஸோமாயஸ்வாஹா...). அதேபோல், நாம் அணியும் ஆடையில், அவனுடைய சாந்நித்தியம் உண்டு. ஸோமஸ் என்றால் சந்திரன்; ஸோமஸ் என்றால் ஆடை என்றும் பொருள் உண்டு (ஸோமஸ்யதனூரஸி...).