பதிவு செய்த நாள்
29
செப்
2020
03:09
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, 91.95 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட கோவில்கள், கடந்த, 7ல் திறக்கப்பட்டன. அதன்பின் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
அந்த வகையில், பிரசித்த பெற்ற, திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கையை செலுத்த, 12 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை மாதத்துக்கு இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கோவில் திறந்து, 20 நாட்களுக்கு பின், நேற்று கோவிலின், 12 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன. கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என, 50க்கும் மேற்பட்டோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோவில் இணை ஆணையர் அசோக்குமார் கண்காணிப்பில் நடந்த பணியில், உண்டியல்களில் மொத்தம், 91.95 லட்சம் ரூபாய், 2.477 கிலோ தங்கம், 2.880 கிலோ வெள்ளி, 31 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.