சின்னாளபட்டி : பொது வாழ்வில் முக்கியத்துவம் பெற்றவர்களை நம்மில் பலர் பெயரளவில் நினைவு கூறுவர். ஆனால், நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவரை நாள் தவறாது வழிபட்டு வருகிறார் காந்திகிராம பல்கலை பேராசிரியர் முருகேசன் 58.1946ல் பூமிதான இயக்கத்தின்போது மகாத்மா காந்தியை காண சின்னாளபட்டி பகுதி மக்கள் முடிவு செய்தனர். பிப். 2ல் காந்தி பயணித்த சென்னை - மதுரை சிறப்பு ரயிலை தண்டவாளத்தின் குறுக்கே அமர்ந்து காந்திகிராமத்தில் நிறுத்தினர். ரயிலில் இருந்து இறங்கி அவர் நின்ற இடத்தில், நினைவு ஸ்துாபி எழுப்பப்பட்டுள்ளது. இங்கு தினமும் மலர் துாவி வழிபடுகிறார் முருகேசன். அவர் கூறியதாவது: காந்தியின் பாதம்பட்ட இடம் கிராமமாக உருவெடுத்துள்ளது. பச்சிளங்குழந்தை பராமரிப்பு துவங்கி, பாலர் பள்ளி, கைத்தொழில் பயிற்சி, கிராமத்தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள், பல்கலை, ஆதரவற்றோர் இல்லம் என விருட்சமாக வளர்ந்துள்ளது.
விபத்தில் பெற்றோரை இழந்த நான் 4 வயதில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தேன். அந்த இல்லமே என்னை பேராசிரியராக ஆக்கியுள்ளது. இதேபோல பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு அளித்து உயர்த்திய பெருமை இதற்கு உண்டு. இருபது ஆண்டுகளாக தினமும் இந்த ஸ்துாபியை வழிபடுகிறேன் என்றார். இவரை வாழ்த்த 94439 61416ல் பேசலாம்.