பதிவு செய்த நாள்
03
அக்
2020
10:10
அன்னதானம் திட்டம் உள்ள கோவில்களில், பக்தர்கள் வசதிக்காக, உணவு பொட்டலங்கள் வழங்குவது துவக்கப்பட்டுள்ளது. தமிழக கோவில்களில், பக்தர்கள் வசதிக்காக, அன்னதானம் திட்டம், 2011 முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கோவில் வருவாய்க்கு ஏற்ப, குறைந்த பட்சம், 25 பேர் முதல் அதிகபட்சம், 200 பேர் வரை, தமிழகம் முழுதும், 311 கோவில்களில், தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.அதில், சென்னை நகரில்மட்டும், 31 கோவில்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், பக்தர்களை விட, கோவிலை சுற்றி வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயனடைந்து வந்தனர்.கொரோனா தொற்று காரணமாக, மார்ச் இறுதி வாரத்தில், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அன்னதானமும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கால் தொழில், வருமானம் இன்றி, பொருளாதார பாதிப்பில் இருந்த மக்கள், அன்னதான திட்டமும் நிறுத்தப்பட்டதால், மதிய உணவின்றி தவித்து வந்தனர்.இது குறித்து, நம் நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டது. இதையடுத்து, சில முக்கிய கோவில்களில் அன்னதானம் தயாரிக்கப்பட்டு, மாநகராட்சி உதவியுடன், வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கோவில்களில், செப்., 1ம்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், சென்னை நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மட்டுமே, தரிசனம் முடித்து செல்லும் பக்தர்களுக்கு, அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்பட்டு வருகிறது. மற்ற கோவில்களில், கொரோனா தொற்று பாதுகாப்பை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அன்னதானத்தை பொட்டலங்களாக வழங்கும் பணி துவங்கியுள்ளது. சென்னை நகரில், 20க்கும் மேற்பட்ட கோவில்களில், இரண்டு நாட்களாக உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.பக்தர்களின் வருகைக்கு ஏற்ப, தமிழகம் முழுதும் அன்னதான திட்டம் அனுமதிக்கப்பட்ட கோவில்களில், உணவு பொட்டலங்கள் வழங்க, அறநிலையத் துறை அறிவுறுத்தி உள்ளது. - நமது நிருபர்-