பதிவு செய்த நாள்
03
அக்
2020
04:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, 13ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மிருகண்டா நதி அருகே உள்ள, வனப்பகுதியில் நடுகல் இருப்பதாக வந்த தகவல்படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சுதாகர், சக்திவேல், சிவா, ஆகியோர் கள ஆய்வு நடத்தினர்.
அப்போது முட்புதருக்கு இடையே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய, நடுகல் கண்டெடுக்கப்பட்டது. கல்வெட்டில் உள்ள விபரங்களை படித்ததில், விக்ரம பாண்டியனின், நான்காவது ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது. இதில், ஜெயவன தானிப்பாலை உடையான் ஆண்டாண்டை எனும், வன்னிய நாடாழ்வான் மகன் திருமலை, அழகியார் சமுத்திரம் என்ற இடத்தில் இருந்து, மாட்டை கவர்ந்து வரும்போது, பிரண்டை என்ற இடத்தில் இறந்ததாக இக்கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்து போனார் என்பதை, மீண்டு எய்தினார் என்றும், வருகையிலே என்பதை வருகைச்சிலே எனும் உள்ளூர் வழக்கில், எழுதப்பட்டுள்ளதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவித்தனர்.