திருப்பதி : திருமலை ஏழுமலையானை புரட்டாசி மாத மூன்றாவது சனிக் கிழமையான நேற்று முன்தினம் ( ஒரே நாளில் ) 22 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். திருமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு நான்கு மாதங்கள் நிறைவு பெற உள்ள நிலையில் ஏழுமலையானுக்கு மிகவும் முக்கிய மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் திரள்வர்.தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க தேவஸ்தானம் திருப்பதியில் அளித்து வந்த இலவச தரிசன டோக்கன்களை தற்காலிகமாக ரத்து செய்தது.
ஆன்லைன் விரைவு தரிசன டிக்கெட்டுகளை மட்டும் குறிப்பிட்ட அளவில் வெளியிட்டு வருகிறது. ஆனாலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் திரண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி 22 ஆயிரம் பேர் ஏழு மலையானை தரிசித்தனர். ஏழுமலையான் தரிசனம் துவங்கிய பின் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்தது இதுவே முதல் முறை.