பதிவு செய்த நாள்
05
அக்
2020
09:10
கடலுார் : கடலுார் பகுதியில், நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மந்தமாக நடப்பதால், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்து மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது.நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.இந்தாண்டு வரும், 17ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது.
விழாவை கொண்டாட கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி கடலுார் வண்டிப்பாளையம், மணவெளி, வண்டிப்பாளையம், சாவடி, கே.என்.பேட்டை, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. கடலுாரில் மட்டுமே சுமார் 500 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.முப்பெரும் தேவியர், பெருமாள், காளி போன்ற சுவாமி பொம்மைகளுடன், பல்வேறு கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கல்யாண செட், தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன், குறத்தி, அஷ்ட லஷ்மி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், தலைவர்களின் பொம்மைகள் பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை தயாரிக்கப்படுகிறது.
செட்டுகள் ரூ. 300 முதல் ரூ. 5,000 வரையில் கிடைக்கிறது. தனிப்பட்ட பொம்மைகளும் விற்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்திலேயே ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்.தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பெருநகரங்கள், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், அமெரிக்கா, கலிபோர்னியா, சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளுக்கும் கடலுாரில் இருந்து பொம்மைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு எதிரொலியால் பொம்மை உற்பத்தி செய்ய தொழிலாளர்கள் வராமல் பிரச்னையால் அதிக அளவில் பொம்மைகள் உற்பத்தி செய்யப் படவில்லை. இருந்தும் பொம்மை தயாரிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. பொம்மைகள் தயார் நிலையிலும் உள்ளது.ஆனால், கடந்த ஆண்டுகளை போல் ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. வழக்கமான கஸ்டமர் வியாபாரிகளை, பொம்மை தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு பொம்மைகளை அனுப்புகின்றனர்.இருந்தும், நவராத்திரி விழா வரும் 17ம் தேதி துவங்க உள்ள நிலையில், விற்பனை மந்தமாக நடப்பதால் பொம்மை தயாரிப்பு பணியில்ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு பரிதவித்து வருகின்றனர்.