பதிவு செய்த நாள்
05
அக்
2020
02:10
அயோத்தி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நன்கொடை திரட்ட விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) திட்டமிட்டுள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்து, தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை, மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அமைத்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, கடந்த மாதம், 5ம் தேதி நடந்தது. பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று, கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இதனையடுத்து ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது: விஎச்பி தேசிய வழிகாட்டுக் குழு கூட்டம் டில்லியில் நவம்பர் 10, 11ம் தேதிகளில் நடக்கிறது. இக்கூட்டத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு பொதுமக்களிடம் நன்கொடைகள் பெறவும், அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்படும். ஜனவரி 15ம் தேதி முதல் 90 நாட்களுக்கு நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் 11 கோடி இந்துக் குடும்பங்களை அணுகி நன்கொடை கேட்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.