சொர்க்கத்தைப் பற்றி பலரும் பலவிதமாக கற்பனை செய்து வைத்திருப்பர். நபிகள் நாயகம் சொர்க்கம் பற்றி கூறும் இனிய செய்திகளைக் கேட்போமா! இறைவனிடம் ஒருவன் மூன்றுமுறை சொர்க்கத்தை கேட்பானேயானால், சொர்க்கம் இறைவனிடம், “யா அல்லாஹ்! இவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பாயாக,” என்று சொல்லும். ‘நரகத்தை விட்டும் என்னைக் காப்பாயாக’ என்று இறைவனிடம் கேட்டால், நரகம் இறைவனிடம், “யா அல்லாஹ்! இவனை நரகத்தை விட்டும் காப்பாற்றுவாயாக,” என்று சொல்லும். சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோராகும். அவர்களுக்கு நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும். கோபத்தை வெளிப்படுத்தும் தன்மை இருந்தும், அதனை வெளிப்படுத்தாமல் அடக்கியாண்ட தன்மையுடைய அடியவனை கியாமநாளில் மக்கள் மத்தியில் இறைவன் அழைப்பான். அவன் விரும்பிய சொர்க்கத்தின் ஹூருல்ஈன் (கன்னி) பெண்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அவனுக்கு முழு உரிமை வழங்கப்படும்.
“மனிதர்களே! நீங்கள் இறைவனிடம் சொர்க்கப்பதியை வேண்டும் போதெல்லாம் ‘பிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கத்தைக் கேளுங்கள். ஏனென்றால் சொர்க்கங்களுக்கு எல்லாம் உயர்வானது ‘ஜன்னத்துல் பிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கமாகும். உங்கள் குழந்தைகளை அதிகமாக முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவியுண்டு. எவர் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ, அவர் அல்லாஹ்வைக் கொண்டும், மறுமைநாளைக் கொண்டும் விசுவாசம் கொண்ட நிலையில் மரணிக்கட்டும். தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பட்டும். சொர்க்கத்திற்கு சென்ற பின் சிறியவராயினும், பெரியவராயினும், எவராயினும் முப்பது வயதுடைய வாலிபர்களாகவே இருப்பார்கள். நிச்சயமாக சொர்க்கவாசிகள் உணவு உண்பர். பானம், நீர் பருகுவார்கள். அவர்களுக்கு சளியும் ஏற்படாது. அவர்கள் உண்ணும் உணவு நறுமணம் கமழும் ஏப்பமாகவும், வியர்வையாகவும் மாறிவிடும். சொர்க்கவாசிகளின் மேனியில் முடி இருக்காது. அவர்களின் கண்கள் அழகாக தோற்றமளிக்கும். அவர்களின் வாலிபமும் அழியாது. ஆடைகளும் பழமையாகாது. சொர்க்கவாசிகள் ஒவ்வொருவருக்கும் கண்ணழகிகளான கன்னிப்பெண்கள் கிடைக்கப்பெறுவர். சொர்க்கத்துக்கு போக ஆசை இருந்தால் நல்லதைச் செய்து இறைவனின் அருளைப் பெற வேண்டும்.