பதிவு செய்த நாள்
08
அக்
2020
09:10
ராணிப்பேட்டை: சோளிங்கர் மலையில், ரோப்கார் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள, ஒரே மலைக்குன்றின் மீது, யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் ஆகியோர், தனித்தனி கோவில்களில் எழுந்தருளி உள்ளனர். யோக நரசிம்மரை தரிசிக்க 1,305 படிகளும், யோக ஆஞ்சநேயரை தரிசிக்க, 450 படிகளும் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு, திருமண தடை, குழந்தை வரம், பில்லி சூனியம், பேய், பிசாசு போன்றவற்றில் இருந்து விடுபடவும், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் ஐதீகம். அண்டை மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
சோளிங்கர் மலைக்கு செல்ல, 2014ல் ரோப்கார் அமைக்க, 8.27 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி, பணிகள் தொடங்கின. ஆண்டுதோறும் கார்த்திகையில், ஐந்து வாரங்கள் இங்கு பிரம்மோற்சவம் நடக்கிறது. அதற்குள், ரோப்கார் அமைக்கும் பணிகள் முடிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் அதிகாரிகள் கூறியதாவது: தற்போது, யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்ல, 448 மீட்டர் உயரத்தில், செங்குத்தாக ரோப்கார் அமைக்கும் பணிகள், முழு வீச்சில் நடக்கிறது. இதற்கான கட்டடம், 125 குதிரை திறன் கொண்ட மோட்டார் பொறுத்துவது, கம்பி வடம் அமைப்பது என, 85 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. சோதனை ஓட்டத்துக்கு பிறகு, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஒரு ரோப் காரில், நான்கு பேர் வீதம், நான்கு ரோப்பில், 16 பேர் என, ஒரு நாளைக்கு 3,000 பேர், பெரிய மலைக்கு சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.