பதிவு செய்த நாள்
09
அக்
2020
10:10
பழநி : அக்.17 ல் துவங்கும் நவராத்திரியையொட்டி பழநியில் ஏராளமான தெய்வங்களின் பொம்மைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
நம்தேசத்தில் நவராத்திரி விழாவில் பெண் தெய்வங்களை போற்றி வணங்குவது வழக்கம். நங்கையரின் நவராத்திரி சிறப்பை பறைசாற்றுவது வீடுகளில் வைக்கப்படும் கொலுதான். ஒன்பது நாட்களும் பொம்மைகளை வைக்கும் கொலு படிகளை வீட்டில் பிரத்யேக மரப்பலகையில் அமைப்பர். முதல் படியில் புல், பூண்டு போன்ற ஓரறிவு உயிரினங்கள் துவங்கி, இரண்டாம் படியில் ஈரறிவு உயிரினங்கள், மூன்றாம் படியில் மூன்றறிவு, நான்காம் படியில் நான்கறிவு, ஐந்தாம் படியில் ஐந்தறிவு, ஆறாம் படியில் மனிதன், மனிதர்களின் பழக்க வழக்கங்கள், ஏழாம் படியில் உயர்ந்த மகான்கள், எட்டாம் படியில் பகவானின் அவதாரங்கள், ஒன்பதாம் படியில் தெய்வங்களின் பொம்மைகளை வைத்திருப்பர்.
பழநியைச் சேர்ந்த ரேவதி கூறியதாவது: அமாவாசை அன்று இரவு கலசம் வைத்து துவக்குவோம். ஒற்றைப் படையில் கொலு படிகள் வைப்போம். கடைசி நாள் விஜயதசமி அன்று பூஜை செய்து விக்ரகங்களை பத்திரப்படுத்துவோம். தினமும் நெய்வேத்தியம் செய்து கன்னிப் பெண்களை பாடச் சொல்லி, பரிசு கொடுப்போம். தற்போதுள்ள சூழலில் பலரை ஒரே நேரத்தில் வரவழைக்காமல் தனித்தனியாக அழைத்து வழிபட அனுமதிப்போம் என்றார்.சன்னதி வீதி வியாபாரி எம்.நாகராஜன் கூறியதாவது: விநாயகர், முருகன், கண்ணன், காஞ்சிப் பெரியவர் உட்பட தனிப்பொம்மைகள், சீதா கல்யாணம், ராவண தர்பார், ராமர் பட்டாபிஷேகம், கார்த்திகை பெண்கள், சப்த கன்னியர் என குழுபொம்மைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் பொம்மைகளை் வாங்கி விற்கிறோம். தற்போது ஊரடங்கு தளர்வுக்குப்பின்பும் சிலரே வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.